search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழை மாணவி"

    போளூர் அருகே ஏழை மாணவியின் கட்டாய திருமணத்தை நிறுத்தி நர்சிங் படிக்க திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி உதவினார். #Tiruvannamalaicollector
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்த வித்யா (வயது 17) என்ற பெண் கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமியிடம் மனு ஒன்றை அளித்தார்.

    அதில், ‘‘எனக்கு 18 வயது நிரம்பவில்லை. ஆனால் எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அதில் விருப்பம் இல்லை. எனவே திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

    அந்த மனு மீது கலெக்டர் விசாரணை நடத்தினார். வித்யா 5 வயதான போதே அவரது தந்தை இறந்து விட்டார், அவரது தாயார் விவசாய கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் மிகவும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை பராமரித்து வருகிறார். மாணவி வித்யா மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தொடர்ந்து படிக்க வைக்காமல் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து மாணவி வித்யாவை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்தார். பின்னர் அவரது தாயாரையும் கலெக்டர் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாணவி வித்யா படித்தால் மட்டுமே நல்ல நிலைக்கு வர முடியும் என்பதையும் எடுத்துரைத்து திருமணத்தை நிறுத்தினார். அதன் பின்னர் மாணவியின் பாதுகாப்பு கருதி சமூக நலத்துறையின் மூலமாக குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்தார். வித்யா உயர்கல்வி படிக்க ஆசை உள்ளதாக கலெக்டரிடம் தெரிவித்தார்.

    தனியார் நிறுவன நிதியுதவியுடன் மாணவி வித்யாவை வந்தவாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிக்க ஏற்பாடு செய்தார்.

    வித்யா 4 ஆண்டிற்கும் செலுத்த வேண்டிய வருடாந்திர கட்டணம், தங்கும் விடுதிக்கான கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களுக்கான மொத்த தொகை ரூ.3 லட்சம் தனியார் நிறுவனத்திலிருந்து செலுத்தப்பட்டது. அதற்கான காசோலையை கலெக்டர் அலுவலகத்தில் வந்தவாசியை சேர்ந்த கல்லூரி நிர்வாகிகளிடம் கலெக்டர் கந்தசாமி, மாணவி முன்னிலையில் வழங்கினார். #Tiruvannamalaicollector
    பெற்றோரை இழந்த ஏழை மாணவி கட்டணமின்றி நர்சிங் படிக்க கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    போளூர் தாலுகா வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த கீர்த்தனா என்பவர் கடந்த மாதம் 9-ந் தேதி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து, தான் கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன் நர்சிங் முதலாம் ஆண்டு படிப்பதாகவும், வயதான பாட்டியால் படிக்க வைக்க முடியாத நிலையில் தொடர்ந்து படிக்க உதவிடுமாறும் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    விசாரணையில், அந்த மாணவி கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் படித்து வருவதும், கீர்த்தனாவிற்கு 5 வயது இருக்கும் போது அவரது தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதும் அதன் பின்னர் அவரது பாட்டி அம்பிகா, அவரை வளர்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து கலெக்டர் கந்தசாமி, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மாணவி கீர்த்தனாவின் குடும்ப நிலையினை சொல்லி கட்டணமின்றி படிக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து, மாணவி கீர்த்தனா கட்டணமின்றி படிப்பதற்கான பரிந்துரை கடிதத்தினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கல்லூரி முதல்வர் ஜெயசூரியா ஜார்ஜிடம் வழங்கினார்.

    மாணவி கீர்த்தனா செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களில் இருந்தும் முழுவதுமாக கல்லூரி நிர்வாகத்தால் விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவி கீர்த்தனா, கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.
    ×